Ads (728x90)

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில குறிப்பிட்ட காணிகளை விடுவிப்பதானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் தீவிரமான அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்.

காணிகளை விடுவிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, முப்படைகளின் தளபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நேரடியாகக் களப்பயணம் மேற்கொண்டோம்.

தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும், சில அதிமுக்கியமான பகுதிகளில் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

எனவே, அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், துறைசார் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளை உள்ளடக்கிய விசேட உயர்மட்டக் கூட்டமொன்று மிக விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget