Ads (728x90)


தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அந்தஸ்தையும் பாராது, தவறு செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

இதனிடையே, தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யும்போது, தம்மை சட்டத்துக்கு மேலானவர்கள் என கருதியவர்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. 

மாத்தளை நகர அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

டித்வா பாதிப்புகளுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியதுடன், அந்த அனைத்துத் திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget