Ads (728x90)

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காகப் செல்லும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக இன்று முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து செல்லும் அதிகளவான படையினரைக் கொண்ட குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து 1132 பேர் கொண்ட படையினர் புறப்படவுள்ளனர். இதில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகளும், நாட்டின் இராணுவ வரலாற்றிலேயே முதன்முறையாக கண்ணிவெடிகள் மற்றும் பொறிகளை செயலிழக்கச் செய்வதற்கான விசேட பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ வீரர்களும் உள்ளடங்குகின்றனர். 

ஹைட்டி நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலைத் தணித்து, அங்கு அமைதியை நிலைநாட்டும் நோக்கில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தப் படையினர் ஹைட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 

உலகில் எங்கு இருந்தாலும், பாதிப்புக்குள்ளான மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தயாராகவுள்ள இராணுவம் நம்மிடம் உள்ளது என்பதை இதன்மூலம் உலகிற்கு எடுத்துரைப்பதுடன், அது நாட்டிற்குப் பெரும் பெருமையையும், கௌரவத்தையும் சேர்க்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாம் உலகின் செல்வந்த நாடாக மாறுவது கடினமாக இருந்தாலும், உலகில் பெருமைமிக்க நாடாக மாற முடியும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், உலக அமைதி காக்கும் படைப் பணிகளுக்காகப் புறப்பட்டுச் செல்லும் அனைவரும் தங்கள் தோள்களில் நாட்டின் பெருமையை சுமந்து செல்கிறார்கள் என்றும், தங்களது கடமையைச் சரியாக நிறைவேற்றி நாட்டின் பெருமையையும், கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget