Ads (728x90)

இலங்கைக் கடற்படையின் புறக்கடலோர ரோந்துக் கப்பல்களில் நிறுவுவதற்காக, 'Cobham' மற்றும் 'Inmarsat' நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட, சுமார் 4 மில்லியன் டொலர்கள் (1.2 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியான விரிவான 'Fleet Broadband' தொகுதியை அமெரிக்கா இலங்கைக் கடற்படைக்கு வழங்கியது. 

மேம்படுத்தப்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் 'Fleet Broadband', கப்பல்களுக்கிடையேயும் மற்றும் கப்பல்களிலிருந்து கரைக்கும் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை உறுதி செய்கிறது. இதன் மூலம், கரையோரத்திலிருந்து தொலைவிலுள்ள கடற்பிரதேசங்களில் செயற்படும்போதும், நம்பகமான குரல், தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் உறுதி செய்யப்படுகிறது.

தலைமையகம், விமானங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் தொலைதூரப் பகுதிகள் உட்பட, பரந்த கடற்பரப்புகளில் இயங்கும் பிற கப்பல்களுடன் நிகழ்நேரத் தொடர்பைப் பேணுவதற்கு இக்கட்டமைப்பு இலங்கைக் கடற்படைக்கு உதவும். 

இத்திறனானது கடல்சார் கள விழிப்புணர்வை பலப்படுத்தும், செயற்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும், அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்கும், சட்டவிரோதக் கடத்தல்களில் ஈடுபடும் கப்பல்களை இடைமறிப்பதற்கும், தடைசெய்யப்பட்ட கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதற்கும் உதவியாக அமையும்.

இது குறித்து போல் கபூர் தெரிவிக்கையில், “எமது இந்தோ-பசிபிக் பங்காளரான இலங்கைக் கடற்படைக்கு, அமெரிக்க செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை வழங்குவதை இன்று நாம் அறிவிக்கிறோம். இலங்கைக் கடற்படைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த மேம்படுத்தலானது, அவர்களின் புறக்கடலோர ரோந்துக் கப்பல்கள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடியது. 

இது கடலிலிருந்து தொடர்பாடல்களை மேற்கொள்வதில் எவ்வித இடைவெளிகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும். அவசரநிலைகளுக்கு விரைந்து பதிலளிப்பதற்கும், எமது பொருளாதாரத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கும், இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் எமது கரைகளை வந்தடைவதற்கு முன்பே அவற்றை முறியடிப்பதற்கும் இலங்கைப் பங்காளர்களுக்கு இது உதவும்”என்றார்.

உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதில் இலங்கைக் கடற்படை வகிக்கும் இன்றியமையாத பங்கினை மீள வலியுறுத்திய கௌரவ பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இப்புதிய தொடர்பாடல் திறனானது கடல்சார் விழிப்புணர்வையும், அமெரிக்கா - இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget