டொலர் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், ஆடைக் கைத்தொழில் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய விரைவான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, இந்நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறையின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தொழிற்சாலைகளை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும், அதற்காக ஒன்றிணையுமாறும் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கிய ஜனாதிபதி, ரூபாயில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரித்த போதிலும், இதனால் டொலருக்கு ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு டொலர் ஈட்டும் வழிகளை வலுப்படுத்துவது அவசியமானது எனச் சுட்டிக்காட்டினார்.முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், காணிகளின் பெறுமதி மற்றும் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான சட்ட மறுசீரமைப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வற் வரி முறைமை காரணமாக உள்நாட்டு மூலப்பொருள் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டதுடன், அதன்போது வழங்கக்கூடிய மாற்றுச் சலுகைகள் குறித்த முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தார்.
சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி அந்த நாடுகளிலிருந்து கிடைக்கும் கோட்டா அளவுகளை அதிகரிப்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்காக, "வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரம்" இந்த ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலீட்டிற்கான தேசிய ஒற்றைச் சாளரத்தை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படும் பணம் எமது நாட்டிலிருந்து வெளியில் செல்வதைத் தடுப்பதற்காக, சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக, பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.


Post a Comment