கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இந்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களம் தேசிய பரீட்சைகள் உட்பட வருடத்திற்கு 300 இற்கும் மேற்பட்ட பரீட்சைகளை நடாத்துகின்றது. எனினும், திணைக்களத்தின் தொழில்நுட்பப் பணிகள் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியான கணினி அமைப்புகளாகக் காணப்படுவதால், பரீட்சை செயல்பாடுகளில் பெரும்பாலான அத்தியாவசியப் பணிகள் மனித வளத்தைக் கொண்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அத்துடன், தரவுகள் மற்றும் பதிவேடுகள் பொதிகளாகப் பிரிவுகளுக்கு இடையே மாற்றப்படுவதால், பரீட்சை முடிவுகள் தாமதமடைதல், தவறுகள் ஏற்படுதல், பொதிகள் மற்றும் மனித வளங்கள் வீணடிக்கப்படுதல் போன்ற குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
தற்போது அரச துறையில் டிஜிட்டல் மயமாக்கல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பரீட்சைத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் பணிகளை மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் மாற்றுவதற்காக இந்த நவீன கணினி மயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Post a Comment