Ads (728x90)

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் "சிலோன் டீ கிராமம்" (Ceylon Tea Village) 500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருடாந்த தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரிப்பதையும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டிற்குள் நாடளாவிய ரீதியில் 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில், 144 தேயிலைக் கிராமங்களை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கு இணையாக, பதுளை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாதிரி கிராமமான ஹாலி எல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பஹமுணுகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின் உடகம கிராமத்தில் நேற்று ஆரம்ப விழா நடைபெற்றது. 

இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தேயிலை சபையின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget