Ads (728x90)

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபை, மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தியுள்ளார். 

பாடசாலை மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்துகொண்டார். 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அது விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்குத் தள்ளப்பட்டுள்ளார்களா? என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளக்கூடிய போதைப்பொருள் பரிசோதனைத் தொகுதிகளை மருந்தகங்கள் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தல், பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளைத் வினைத்திறன் மிக்கதாகச் செய்தல் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றுதல், மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget