Ads (728x90)

நாட்டில் நீதிமன்றச் சட்டங்களின்படி எவரும் "அரசியல் கைதி" என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறினாரே, அந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னும் இருக்கிறதா? என நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீதிமன்றங்களைப் பொறுத்தவரை எவரையும் அரசியல் கைதி என்று குறிப்பிட்டு விளக்கமறியலிலோ அல்லது சிறைத்தண்டனையிலோ அடைக்கப்படுவதில்லை. நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டவர்கள் என்றும், பல பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கமளித்தார். 

கடந்த கால அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்த அறிக்கையின்படி, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது மற்றும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கையானது வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுவதற்கும் பொதுவானதாகவே இருக்கும். எது எவ்வாறாயினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்கு, அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget