Ads (728x90)

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவும், இணக்கப்பாட்டை எட்டவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைத் தனித்துவமாகப் பேணுவதற்கும், முன்வைப்பதற்கும் உள்ள சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்களைக் கொண்ட விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்தத் தளம் அமையும் எனத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்க இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசியலமைப்பானது நீதி, சமத்துவம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிசெய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அதன் செயலாளர் நிஸாம் காரியப்பர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் அதன் உபதலைவர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget