Ads (728x90)

நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரகக் கற்கள் என்பது இலங்கையில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும் நோய் நிலைமைகளில் ஒன்றாகும். நாடளாவிய ரீதியில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்ட 30 இற்கும் மேற்பட்ட சிறுநீரகப் பிரிவுகள் இயங்கி வந்த போதிலும், சிகிச்சைக்கான தேவை மிக அதிகமாகவே உள்ளது. 

உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை, குறைந்த அளவிலான அறுவை சிகிச்சைக்கூடங்கள் மற்றும் நவீன எண்டோயூரோலஜிக்கல் தொழில்நுட்பங்களுக்கான குறைந்த அணுகல் என்பன இதற்கு முக்கிய காரணங்களாகும். தற்போது இந்நாட்டில் சிறுநீரகக் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சைக்காக 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுநீரகக் கல் நோயால் பெருமளவிலான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயாளி சிகிச்சை சேவைகளையும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதில் இந்த மையம் மக்களுக்கும் நாட்டின் சுகாதார சேவைக்கும் பெரும் நிவாரணமாக அமையவுள்ளது.

கடந்த 20 வருடங்களாகச் செய்ய முடியாமல் இருந்த இப்பணி வெறும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன், சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான பிரத்யேக மத்திய சிகிச்சை மையத்தை நிறுவும் கருத்தாக்கத்தை ஊக்குவித்ததன் அடிப்படையில் இந்த மையம் நிறுவப்பட்டதுடன், இச்சங்கம் இன்றுவரை இம்மையத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

மேலும், சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையத்தின் தொடக்கத்தில், பிரபல தொழிலதிபரான பொறியியலாளர் நஹில் விஜேசூரிய அவர்கள் தேவையான பல்வேறு நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி ஆதரவளித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget