Ads (728x90)

இலங்கையில் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் 282 மில்லியன் ஜப்பானிய யென் (591 மில்லியன் இலங்கை ரூபா) நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அரசதுறையில் பணியாற்றும் நம்பிக்கைக்குரிய இளம் நிர்வாக அதிகாரிகளுக்கு ஜப்பானில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிற்சி அளித்து, அவர்களது அறிவையும், திறன்களையும் மேம்படுத்தி, அவர்களை அந்தந்தத் துறைகளில் தலைவர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு 15 அரசதுறை அதிகாரிகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்களது ஆய்வுத்துறைகள் அரச கொள்கை, சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி, பேரண்டப் பொருளியல், பொதுநிதி மற்றும் முதலீட்டு முகாமைத்துவம், தொழில் அபிவிருத்திக் கொள்கை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு துறை சார்ந்தவையாக அமைந்துள்ளன.

அதற்கமைய இந்த நிதியுதவி தொடர்பான ஆவணங்களில் ஜப்பான் சார்பில் இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் இலங்கை சார்பில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கையெழுத்திட்டனர்.

இத்திட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றிலிருந்து இன்று வரை இதனூடாக இலங்கையைச் சேர்ந்த 254 அரச அதிகாரிகள் பயனடைந்துள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget