Ads (728x90)

நாட்டில் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இடம்பெற்றுள்ள பில்லியன் கணக்கான நிதி மோசடி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கறவை மாடு கொள்வனவு, சீனாவிலிருந்து உர இறக்குமதி உள்ளிட்ட நாடு இழந்துள்ள அனைத்து பாரிய நிதி இழப்புக்கள் தொடர்பிலும், காத்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இவ்வாறான மோசடிகளின் போது கடந்த அரசாங்கங்கள் எந்தவித விசாரணைகளையோ, கைதுகளையோ மேற்கொள்ளவில்லை என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கங்களுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே என்றும் அவர் தெரிவித்தார்.

இடம்பெற்றுள்ள அனைத்து மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் உடனடியாகவே விசாரணைகளை நேர்மையாக முன்னெடுத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதே, தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதியில் இடம்பெற்றுள்ள சைபர் மோசடி தொடர்பில் அமெரிக்க நிதி புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கிடைத்துள்ளது. சர்வதேச பொலிஸ் ஊடான விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் வெகுவிரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget