Ads (728x90)

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். 

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார். 

எனினும், இந்த சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் நோக்கமாகும் என்றும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட கம்பனிகளுடன் எட்டப்படவுள்ள ஒப்பந்தங்களில் மலையக மக்களுக்குச் சட்டரீதியான காணி உரிமை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்ளடக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் காரணமாக வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அந்த மக்களுக்காக இரண்டு கட்டங்களின் கீழ் 13,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு கலந்துரையாடலில் இணைந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், நாட்டின் பொதுவான பிரச்சினைகளின்போதும் இதேபோன்று செயற்படுமாறு அனைவரையும் இங்கு கேட்டுக்கொண்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நிசாம் கரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர், என்.பி.எம்.எம். தாஹிர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் பரத் அருள்சாமி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget