கணேமுல்ல சஞ்சீவ கொலை உட்பட பல மனிதக் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கொமண்டோ சலிந்த உட்பட 5 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் ஒகஸ்ட் 30 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகிய சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பின்னர், கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது, கெஹெல்பத்தர பத்மே 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாக தொலைபேசி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்தேகநபரிடமிருந்து 8 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றிலிருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. பின்னர் அத்தரவுகள் மீட்டெடுக்கப்பட்டன. அக்கைப்பேசிகளிலிருந்து 8,841 தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 326,671 புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1,101 ஒலிப்பதிவுகளும், 5,039 காணொளிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.
அந்த கைப்பேசி தரவுகளை பகுப்பாய்வு செய்தபோது 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
அது குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு அறியத்தரப்பட்டுள்ளது. அவரது தொலைபேசிகளிலிருந்து 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.
7 நடிகைகள் மற்றும் மாடல்கள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சந்தேகநபரின் கைப்பேசியில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களின் 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் காணப்படுகின்றன.
இதுதவிர, 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சந்தேகநபரிடம் 21 துப்பாக்கிகள் இருந்த நிலையில், அவற்றில் 19 துப்பாக்கிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர்.
இவர்களை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment