Ads (728x90)

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும், ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன. 

இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். 

நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.

அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், மக்களுக்கு நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

இந்த சீர்திருத்தங்கள், முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரந்த மறுசீரமைப்புகளின் ஒன்று மாத்திரமேயாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்து அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்து அல்ல எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். 

எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அடுத்ததாக உபுல் அவர்கள் குறிப்பிட்ட சவால், அதாவது இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் காரணமாக மற்றைய ஜனாதிபதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களுக்கும் செல்ல வேண்டி வரலாம் என்பதாகும். 

நான் வெளியேறத் தயாராகவே உள்ள ஒரு மனிதன். நான் இங்கு அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அல்ல. அதேபோன்று, இந்த மாற்றத்தைச் செய்வதற்காக அந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ள மனிதன். சவால் ஏதுமின்றி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு மாற்றம் எப்போதும் சவாலை எதிர்கொள்வதன் மூலமே சாத்தியமாகிறது. 

இங்கு சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இருப்பினும் விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன அல்லவா? அதில் உயிர் ஆபத்து இருக்கிறது என்பதை நான் அறிவேன். 

ஆனால், ஓர் சவாலை எதிர்கொள்ளாமல் எதனையும் மாற்றியமைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அதனால் அந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார். அந்த சவாலின் காரணமாக எனது பதவி அற்றுப்போகுமாயின், அதை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விலகிச் செல்ல நான் தயார். அதற்கு நான் ஆயத்தமாகவே உள்ளேன் என்றார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து ஏதேனுமொரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என்றும் பரிந்துரைத்தனர். 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget