Ads (728x90)

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் உலகளாவிய மையம் மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியன இணைந்து கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்த ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வு மிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செயற்பட முடியாது. அரசு, தனியார் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டும். 

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஆண்டுக்கு 2.5 முதல் 4 ட்ரில்லியன் டொலர் வரையிலும், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் 1.5 ட்ரில்லியன் டொலரும் நிதிப் பற்றாக்குறை நிலவுகின்றது. 2030 ஆம் ஆண்டாகும்போது இப்பிராந்தியத்தில் 88 சதவீதமான அபிவிருத்தி இலக்குகளை தவறவிடும் அபாயம் உள்ளதால் முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டும்.

சவாலான காலப்பகுதிக்கு பின்னர் இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலராக உயர்ந்தது.

தலா வருமானம் 5,000 டொலர்களைக் கடந்துள்ளது. இருப்பினும், வெறும் எண்களால் மட்டுமே காட்டப்படும் வளர்ச்சியையன்றி, நியாயமான நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget