கோட்டை அரசனான ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் (15ஆம் நூற்றாண்டு), அவனது அமைச்சரான அழகக்கோனார் என்பவரின் வழிகாட்டுதலின்படி, தொண்டமான் என்ற குறுநில மன்னன் உப்பளங்களை உருவாக்குவதற்காகவும், நீர்ப்பாசனத்திற்காகவும் இப்பகுதியில் ஒரு பெரிய வாய்க்காலை வெட்டினான்.
கடலையும் ஆற்றையும் இணைக்கும் இந்த வாய்க்கால், பிற்காலத்தில் அந்த மன்னனின் பெயரால் "தொண்டமானாறு" என்று அழைக்கப்பட்டது. இந்த ஆற்றின் கரையிலேயே சந்நிதியான் ஆலயம் அமைந்துள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வழிபாட்டு முறைகள் ஏனைய ஆகம விதிப்படியான கோயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இது கதிர்காமத்தின் வழிபாட்டு மரபை (காடாந்தர மரபு) அப்படியே பின்பற்றுகிறது.
இக்கோயிலில் பிராமண சிவாச்சாரியார்களுக்குப் பதிலாக, வேடர்களின் வழிவந்த மரபினரான 'கப்புவாக்கள்' அல்லது 'பூசாரிகள்' தான் வழிபாடுகளை நடத்துகின்றனர்.
பூசாரிகள் வாயைக் கட்டிக்கொண்டு, மந்திரங்கள் எதுவும் உரக்க ஓதாமல், அசைவற்று மௌனமாகவே வழிபாடுகளைச் செய்வர்.
கருவறையில் சிலைகளுக்குப் பதிலாக முருகனின் 'வேல்' மட்டுமே இருக்கும். அதுவும் ஒரு திரைச்சீலையினால் மறைக்கப்பட்டிருக்கும். திரைச்சீலைக்கு பின்னால் தான் பூசைகள் நடக்கும்.
சந்நிதியான் என்றாலே அன்னதானம் தான் நினைவுக்கு வரும். சாதி, மத பேதமின்றி வரும் அனைவருக்கும் தினமும் அன்னதானம் வழங்கும் மடங்கள் இக்கோயிலைச் சுற்றி ஏராளமாக உள்ளன. இதனால் இவரை "அன்னதானக் கந்தன்" என்றும் அழைப்பார்கள்.
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை அன்று இக்கோயிலின் புகழ்பெற்ற தீர்த்தத் திருவிழா தொண்டமானாறு ஆற்றில் நடைபெறும். யாழ்ப்பாணத்தின் நாலாதிசைகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடிகள் எடுத்தும் இத்திருவிழாவில் கலந்துகொள்வது வழக்கம்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் என்பது ஆடம்பரமான சடங்குகளைக் கடந்த, எளிமையையும், தூய்மையான பக்தியையும்பசிப்பிணி போக்கும் அன்னதானத்தையும் முதன்மையாகக் கொண்ட ஒரு உன்னதமான ஆன்மீகத் தலமாகும்.

Post a Comment