Ads (728x90)

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ”சிரிலிய சவிய” அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அரச வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி குறித்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படாமல் என்ன ஆனது என்பது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருதானை மற்றும் சுதுவெல்ல வங்கி கிளைகளில் பராமரிக்கப்பட்டு வந்த ”சிரிலிய சவிய”அமைப்பின் கணக்குகளுக்கு, எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நிதி மாற்றப்பட்டதாக வங்கியின் அப்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget