Ads (728x90)

இலங்கையின் பொதுச்சுகாதாரத் துறைச் சாதனைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு (WHO) விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது.

மலேரியா நோயற்ற நிலையைத் தொடர்ந்து பேணி வருவதுடன், ஏற்புவலி (Tetanus) நோயை வெற்றிகரமாக ஒழித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பால் விசேட சான்றிதழ் வழங்கி இலங்கை கௌரவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வின் போது, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் இந்தச் சான்றிதழை சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி கௌரவித்துள்ளார்.

மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நாடு தழுவிய ஏற்புவலி தடுப்பூசித் திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம், ஏற்புவலி நோயையும் ஒரு தசாப்த காலமாக இலங்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

நாட்டின் பலமான சுகாதாரப் பாதுகாப்பு முறைமை, தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி வழங்கல் மற்றும் சிறந்த நோய் கண்காணிப்பு வழிமுறைகளே இந்த மைல்கற்களை எட்டுவதற்குக் காரணமாக அமைந்ததாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget