Ads (728x90)

நாட்டில் தொடரும் கனமழையுடனான வானிலை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். 

நில்வளா, கிங் கங்கை, களு கங்கை, மகாவலி கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் களனி மற்றும் மகாவலி கங்கையைச் சார்ந்த மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 150 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அதிதீவிர 3ஆம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் நவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கும் 1ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை மற்றும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல ஆகிய பிரதேசங்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget