இந்த உடன்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கவுள்ளது.
இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை கிடைத்த மொத்த நிதியுதவி சுமார் 2.7 பில்லியன் டொலர்களாக உயர்வடையும்.
தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரம் கணிசமான மீள்தன்மையைக் காட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுத் தலைவர் இவான் பபர்ஜியோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஓகஸ்ட் மாத முடிவில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
எனினும், நிறைவேற்று சபையின் இறுதி ஒப்புதலுக்கு முன்னர், 2027 வரவு செலவு திட்ட அளவுருக்களுக்கு அமைவாக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை பூர்த்தி செய்தல் என்பன அவசியமென சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கு யுத்தத்தின் காலம் மற்றும் தீவிரத்தன்மை, உலகளாவிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு தொடர்ந்தும் ஆபத்துகள் நிலவுவதாக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

Post a Comment