Ads (728x90)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நவலோக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நாடாளுமன்றத்தில் வைத்து நாமலிடம் ஒப்படைத்துள்ளார்.

நாமல் 2010 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த போது அவருக்கு வழங்கிய ஆலோசனைகளையும் அவர் அக்கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் நாமல் தன்னிடம் அனுமதி கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மஹிந்த  ராஜபக்‌ஷ, அரசியல் வாழ்க்கையில் சிறைவாசத்தையும், பல்வேறு கஷ்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனத் தான் மகனுக்கு எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

நீ அரசியலில் பிரவேசிக்க விரும்பினால் பிரவேசி. ஆனால் சிறைக்குச் செல்லவும் கஷ்டங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் எனத் தான் நாமலிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாமல் பிறப்பதற்கு முன்னர், அரசியலில் பிரவேசித்த சிறிது காலத்திலேயே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறியுள்ள அவர், தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனையை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது சிறைவாசக் காலத்தில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையே தனக்கு முக்கியமான ஆதாரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த  ராஜபக்‌ஷ, நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்குமாறு மகனிடம் வலியுறுத்தியுள்ளார்.

யார் என்ன கூறினாலும், நீதித்துறையின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் பிறந்த நாவலோக வைத்தியசாலையில் தானும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்களது இளைய மகன்களான யோஷித மற்றும் ரோஹித  ராஜபக்‌ஷ ஆகியோர் தங்களைக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்‌ஷ தொடர்பான சட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட மஹிந்த  ராஜபக்‌ஷ, அவருக்கு எதிரான வழக்குகளில் ஒன்று கடற்படையில் இணைவதற்கான அவரது தீர்மானத்துடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தாலும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாமலிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் தங்களது பெற்றோரின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் செய்வதற்கு பிள்ளைகள் பொறுப்பல்ல. பழிவாங்காமல் இருப்பதே ராஜபக்‌ஷ குடும்பத்தின் வழிமுறையும் பாரம்பரியமும் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது குடும்பம் பங்களிப்புச் செய்திருந்தபோதிலும், தமது குடும்பத்தின் மீது நியாயமற்ற வகையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேர்தல்களில் தமது குடும்பம் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், இலங்கை மக்கள் நன்றியுணர்வு கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை நாமல் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பௌத்த மத ஆசீர்வாதத்துடன் அந்தக் கடிதம் நிறைவடைந்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget