பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் இன்று இரவு 09.56 அளவில் மின் விநியோகம் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்தடைக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் மேல் கொத்மலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட போதிலும், மின்சார விநியோகத் தடைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மின்சாரத் தடையினால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக, எரிபொருள் விநியோகமும் தடைப்பட்டமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களான அம்பத்தலை மற்றும் பியகம ஆகியவற்றின் செயற்பாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டன.
சமநிலையின்மை காரணமாக சமனலவெவ மற்றும் புதிய லக்ஷபான ஆகிய மின் நிலையங்களைத் தவிர, நுரைச்சோலை உள்ளிட்ட ஏனைய அனைத்து மின் நிலையங்களும் செயலிழந்ததாக வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment