Ads (728x90)

எரிபொருள் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும், 'அஸ்வெசும' பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீட்டிற்கான மதிப்பீட்டை, இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

குறித்த தொகையில் 41 பில்லியன் ரூபா வலுசக்தி அமைச்சின் செலவினத்திலும், 6 பில்லியன் ரூபா நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் 'அஸ்வெசும' திட்டத்திற்காகவும் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் நிலைமையினால் உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. எரிபொருள் விநியோக கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதற்காகவே எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நவம்பர், டிசெம்பர் மாதங்களுக்கான எரிபொருள் நிவாரணத்துக்காக 4,100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தின் சுமையை முழுமையாக மக்கள் மீது சுமத்தவில்லை.

செப்டெம்பர் மாதம் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதால் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இதனால் நேரடியாக பாதிக்கப்படும் தரப்பினருக்கு நிவாரணமளிக்க 6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதி உள்ளவர்களுக்கு மாத்திரமே நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு நிவாரண தொகையை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது முறையற்றது.

அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது 11 இலட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஏழ்மை மற்றும் அதி ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மாத்திரமே தற்போது நிவாரண தொகை வழங்கப்படுகிறது என்றார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget