Ads (728x90)

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM), இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

ருவாண்டா குடியரசின் ஜனாதிபதி போல் ககாமேவை பிரதமர் சந்தித்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு வழிகளைக் கண்டறிதல், பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியன குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து, ஜமேக்காவின் பிரதமர் கலாநிதி அண்ட்ரூ ஹோல்னஸ்ஸையும் பிரதமர் கலாநிதி அமரசூரிய சந்தித்துப் பேசினார். இலங்கைக்கும் – ஜமேக்காவுக்கும் இடையிலான மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகிய விடயங்களில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இருதரப்பு ஈடுபாட்டை மேலும் கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், 2027 ஜனவரியில் நடைபெறவுள்ள Expo Sri Lanka கண்காட்சியில் பங்கேற்குமாறு ஜமேக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், 2028ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய மகளிர் விவகார அமைச்சர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு அவர் ஜமேக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget