இந்தியாவின் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு இலங்கைத் தூதுக்குழுவிற்கு அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கினார்.
2023 ஆம் அண்டு முதல் 2025 வரை இச்சங்கத்தின் தலைமைப் பதவியை வகித்த நாடு என்ற அடிப்படையிலும், தற்போதைய தலைமையான இந்தியா மற்றும் உப தலைமையான மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து 'ட்ரொய்கா' (Troika) உறுப்பினர் என்ற ரீதியிலும் இலங்கை இதில் பங்கேற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், கடந்த மே மாதம் இலங்கையின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 'கொழும்பு பிரகடனத்திற்குப்' பின்னரான முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளில் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புகள், குறிப்பாக மீனவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் கரையோர மக்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடியான நடைமுறைப் பலன்கள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேவேளை, இம்மாநாட்டிற்கு இணையாக இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர்களுடனும் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

Post a Comment