Ads (728x90)

அரசியல்வாதிகளுக்கான நிவாரண வழங்கல் நிதியமாக செயற்பட்ட ஜனாதிபதி நிதியம் தற்போது நடுத்தர மக்களுக்கான நிதியமாக மாற்றப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் பலர் நீதிமன்றத்துக்கு செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினர் மிகவும் வேதனையடைந்து தற்போது பல குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது. 

பரம்பரை ஆட்சி அலகு நடுத்தர மக்களால் புதிய தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அரசாங்கத்தை எவ்வழியிலாவது, நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தால் பயனடைந்த தரப்பினர் இன்று பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

ஜனாதிபதிக்கான செலவினத்துக்கு இம்முறை 11,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 65,000 மில்லியன் ரூபா கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை போன்று ஜனாதிபதியின் தனிப்பட்ட தேவைகளுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. 

ஜனாதிபதி தனது தனிப்பட்ட தேவைக்காகவோ அல்லது கட்சியின் நடவடிக்கைகளுக்காவோ இந்த நிதியை ஒதுக்கவில்லை. மக்களின் அபிவிருத்தி மற்றும் நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவே 11 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு 52 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் வரிப்பணம் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகிறது. நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியில் வைத்துக் கொண்டு ஜனாதிபதி சுகபோகமாக வாழவில்லை. 

கடந்த கால வர செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான செலவீன ஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கும், அவரது குடும்பத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. அவ்வாறான தன்மை தற்போது கிடையாது.

ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. தற்போது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் நலன் நிதியமாகவே ஜனாதிபதி நிதியம் செயற்பட்டது. 

2024 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் எவருக்கும் நிதியளிக்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு 1 இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 5,000 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்த ஆண்டு சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் திறன் வெளிப்படுத்தல் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நடுத்தர மக்களுக்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது அரச நிறுவனங்களாகவும், நீதிமன்றங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget